ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:34 IST)

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதீர்.! அமைச்சர் சிவசங்கர்..!!

தமிழ்நாட்டில் 95% விழுக்காட்டிற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.
 
தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளும் இயங்குகிறது எனவும் 95% விழுக்காட்டிற்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என எண்ணி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான அகவிலைப்படி நிதி நெருக்கடியால் வழங்க முடியவில்லை என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கால அவகாசம் தான் கேட்கிறோம் என கூறினார்.  அகவிலைப்படி கிடைக்காமல் போனதற்கு காரணமான எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் சேர்ந்து போராடுவது சரியானது அல்ல என அவர் தெரிவித்தார்.
 
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ய வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கோரிக்கைகள் வைக்கப்படாமலே தீபாவளிக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது எனவும் பண்டிகை காலத்தில் தங்கள் கொண்டாட்டத்தை தள்ளி வைத்துவிட்டு மக்களுக்காக பேருந்துகளை இயக்குவோர் தொழிலாளர்கள் என தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் அனைவரும் பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.