ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (14:17 IST)

வெளியானது காலாண்டு வினாத்தாள்தான்.. ஆனால்..? – அமைச்சர் வைத்த ட்விஸ்ட்

காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதாக செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலையிலும், 11ம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

இதுதவிர 1 முதல் 9 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு காலை, மதியம் இரண்டு பிரிவாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காலாண்டு வினாத்தாள் ஒன்று செல்போன் செயலி ஒன்றின் மூலமாக வெளியானது சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான எந்த காலாண்டு வினாத்தாளும் வெளியாகவில்லை. மற்ற வகுப்பு வினாத்தாள்கள்தான் வெளியாகியுள்ளது. அவை நடந்து முடிந்த பழைய தேர்வுகளின் வினாத்தாள்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வினாத்தாள் விவகாரத்தால் தேர்வு ஒத்தி வைக்கப்படுமோ அல்லது மாற்று வினாத்தாள்கள் மீண்டும் வழங்கப்படுமோ என்று ஏற்பட்ட பதட்டம் தற்போது அமைச்சரின் பதிலால் நீங்கியுள்ளது.