சவுண்டு விடுவோம், கல்லும் விடுவோம்; நாங்கதான் அதிமுக! – பஞ்ச் பேசிய ராஜேந்திரபாலாஜி!
”அமைதியா போற பழக்கம் அதிமுகவுக்கு கிடையாது” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சுந்தரபாண்டியத்தில் நடந்த பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் ”ஜெயலலிதாவிற்கு 72 வயது, எம்ஜிஆருக்கு 103 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நமக்கு தெரிந்ததெல்லாம் அடிமைப்பெண் எம்ஜிஆர்தான். இறக்கும்போதும் அவர் அப்படியேதான் இருந்தார்.” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ”மக்களிடையே மத கலவரத்தை கிளப்பி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். சிஏஏவால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என கேள்வியெழுப்பியதும் பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்து விட்டார். அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல அமைதியாய் இருப்பதற்கு! காங்கிரஸ்தான் கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். அதிமுகவினர் எம்.ஜி.ஆர் வழிவந்தவர்கள். சவுண்டு கொடுக்கணும், யாராவது ஓவரா பேசுனா கல்லை எறியணும்.. அவர்தான் அதிமுகக்காரர்” என்று கூறியுள்ளார்.