ரவுடி கொக்கி குமாரை நலம் விசாரித்த அதிமுக அமைச்சர் : பின்னணி என்ன?
சப் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி கொக்கிகுமாரை அதிமுக அமைச்சர் மணிகண்டன் மருத்துவமனையில் சந்தித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்த கொக்குகுமார் என்கிற ராஜ்குமார் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர். ஒரு வழக்கு தொடர்பாக இவரை கைது செய்ய ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தேடி சென்றார்.
அப்போது கொக்கிகுமார் சக்கரை கோட்டை கண்மாய் அருகே தனது நண்பன் விக்னேஷுடன் மது அருந்தி கொண்டிருந்தான். அப்போது அவனை பிடிக்க தினேஷ் முயன்ற போது, கொக்கிகுமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷை தாக்கியுள்ளனர். இதனையடுத்து தினேஷ் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அவர்கள் இருவரையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட இருவரும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதிக்கு அந்த மருத்துவமனைக்கு சென்ற அதிமுக அமைச்சர் மணிகண்டன், கொக்கிகுமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குற்றசெயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை, அதுவும் சப் இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.