12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடக்குமா? நடக்காதா? – அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்து குறித்து இரண்டு நாட்களில் முடிவு வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னமும் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் பட்டப்படிப்பில் சேருவது உள்ளிட்டவற்றிற்கு கால தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து இன்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மாணவர்களின் கல்வி அளவிற்கு அவர்களது உடல்நலமும் முக்கியம் என முதல்வர் கூறியுள்ளார். எனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து 2 நாட்களுக்குள் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரிடமு கருத்து கேட்குமாறு முதல்வர் கூறியுள்ளார். கருத்து கேட்பிற்கு பிறகு தேர்வு குறித்த முடிவை முதல்வர் வெளியிடுவார்” என தெரிவித்துள்ளார்.