திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (19:36 IST)

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

Madurai Court
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.  
 
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் உத்தரவிட வேண்டும் எனவும்  கோரியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்றும் இல்லை என்றால், அது கூவமாக மாறிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது என்றும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 
கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன வழி என்பது குறித்து பொதுப்பணித்துறையின் நெல்லை நீர்வள ஆதார பொறியாளர் வரும் 26 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர். 

 
மேலும் தாமிரபரணி ஆற்றின் 84 மண்டலங்கள், படித்துறைகளை யார் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.