புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (12:59 IST)

மேட்டூரில் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு! – 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக வந்துக் கொண்டிருகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரிநீர் 16 மதகு வழியாக 1.52 லட்சம் கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் பாயும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூ, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.