வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (14:22 IST)

அரை நிர்வாணமாக நள்ளிரவில் நகர்வலம் வரும் முகமூடி ஆட்கள்: கோவையில் பீதி!

கோவையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் முகமூடி கொள்ளையர்களால் பீதி ஏற்பட்டுள்ளது. 
 
கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன்  அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், அதே நாள் மற்றொரு நகர பகுதியில் அதேபோல் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
 
கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சட்டையின்றி கையில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. 
 
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே நாள் பீளமேடு வார்டு 38க்குற்பட்ட பாலகுரு கார்டன் பகுதியிலும் இதேபோல் 3 பேர் முகங்களில் துணிகள் அணிந்து, அரைகுறை ஆடையுடன் சுற்றும் வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
மேலும், பீளமேடு பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது. சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
கடந்த 4 மாதங்களுக்கு முன் இதேபோல், சிங்காநல்லூர்  பகுதியில் குழுவாக ஆயுதங்களுடன் பலர் சுற்றித்திருந்ததும், அந்த அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற  சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது.