ஓபிஎஸ் வந்த விமானத்தில் பயணி மர்மமாக மரணம்! – சென்னையில் பரபரப்பு!
மதுரையிலிருந்து எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதுரையிலிருந்து சென்னை வழியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் ஒன்று மதுரையில் புறப்பட்டது. அதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் பயணித்தனர். பிற்பகல் 2.15க்கு விமானம் சென்னை வந்தடைந்ததும் அனைத்து பயணிகளும் தரையிறங்கிய நிலையில் ஒருவர் மட்டும் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அவரை சோதித்ததில் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த போலீஸார் உடலை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் மதுரையை சேர்ந்த 72 வயதான சண்முகசுந்தரம் என தெரிய வந்துள்ளது. விமானத்தில் ஒருவர் இறந்து இருந்ததால் விமானம் கிருமி நாசினி தெளித்து முழுவதும் தூய்மைபடுத்தப்பட்ட பிற்கு 2 மணி நேரம் தாமதமாக மும்பைக்கு புறப்பட்டுள்ளது.