முதியோர்களை குறி வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்து தருவது போல நடித்து 49 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புறங்களில் வசிக்கும் முதியோர்கள், தங்களது முதியோர் பென்சன், நூறுநாள் வேலைக்கான ஊதியத்தொகை என தங்களது வங்கி கணக்கில் உள்ள தொகையை எடுக்க உசிலம்பட்டி நகர் பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்காக தினசரி நூற்றுக்கணக்கான முதியோர்கள் பணம் எடுக்க வருகை தருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் அருகில் இருப்பவர்களின் உதவியை முதியோர்கள் நாடி பணம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவது போல நடித்தும், ஏடிஎம் கார்டை மாற்றியும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அவ்வாறு கடந்த 5ஆம் தேதி தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த பசுபதி என்ற முதியவரிடமிருந்து 28 ஆயிரமும், கடந்த 8ஆம் தேதி குருவிளாம்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்ற முதியவரிடமிருந்து 21,400 ரூபாயும் கொள்ளையடித்துச் சென்றது உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வங்கி ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த சங்கருக்கு போதிய வேலையின்மையாலும், வருமானம் இன்மையாலும் இது போன்ற சம்பவங்களை அடிக்கடி அரங்கேற்றி வந்ததும், பழனி உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்குகள் பதிவாகி தேடப்பட்டு வரும் குற்றவாளி என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.