செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (11:58 IST)

திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி?

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.