1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (20:00 IST)

''கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்''- எடப்படி பழனிசாமி

edapadi palanisamy
இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்தக் கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பெளர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழச்சியாகக் கொண்டாடும் தீபத் திருநாளாகும்.

இதனையொட்டி இந்த ஆண்டு கார்த்திகை தீபமானது நாளை 26.11.2023 - ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. #திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீப விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடுவர்.

ஆலயத்தின் முன்புறத்தே பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து 'சொக்கபானை'க்கு அக்கினியிட்டு ஜோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து, ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெய்யும், அதில் இடப்படும் திரியும் தன்னை கரைத்துக்கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியைத் தருகிறது.

இதேபோல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது. கார்த்திகை தீபத் திருநாளன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்தக் கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.