1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (13:25 IST)

சசிகலா பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் - கே.பி.முனுசாமி ஆவேசம்

சசிகலாவின் கணவர் நடராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறான தகவல்களை பரப்பினால், அவர்கள் குடும்பத்தை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த சசிகலவின் கணவர் நடராஜன், ஜெயலலிதா, ஓ.பி.எஸ், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் ஆகியோர் பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி “ஜெயலலிதாவின் தோழி என்ற போர்வையில் போயஸ்கார்டனுக்குள் நுழைந்து, கட்சியில் பல வருடங்களாக உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகளை பறித்தவர் சசிகலா. சசிகலாவின் கணவர் நடராஜனும், ஜெ.விற்கு துரோகம் செய்ததால், அவரை 1989ம் ஆண்டிலேயே போயஸ்கார்டனிலிருந்து விரட்டினார் ஜெயலலிதா. அதன்பின் அவர் உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டனில் அவர் அனுமதிக்கப்படவே இல்லை. 
 
மேலும், நடராஜன் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அப்படிபட்டவர்களின் கைகளின் அதிமுக சிக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் சசிகலா குடும்பத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் தொடர்ந்து ஜெ.வை பற்றி பொய்யான தகவலை பரப்பினால், அவர்கள் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்” என ஆவேசமாக கூறினார்.