புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (13:42 IST)

இவங்களுக்கெல்லாம் பதில் சொல்லனும்னு அவசியமில்ல! – வி.பி.துரைசாமி Vs கே.பி.முனுசாமி!

ஆதாயத்திற்காக கட்சி மாறிய துரைசாமி போன்றவர்களுக்காக பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி “தமிழகத்தில் திமுக Vs அதிமுக என்ற நிலை தற்போது மாறி திமுக Vs பாஜக என மாறியுள்ளது” என கூறியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்வரும் தேர்தலில் பாஜக தலைமையின் கீழ் கூட்டணி அமைக்கும் கட்சிகள் வெற்றி பெறும் எனவும் அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.முனுசாமி “சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

கூட்டணி தலைமை குறித்து பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி பேசியது குறித்த கருத்து தெரிவித்த அவர் ”ஆதாயத்துக்காக பாஜக சென்ற வி.பி.துரைசாமியின் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது” என கூறி முடித்துக் கொண்டுள்ளார்.

பாஜக – அதிமுக இடையேயான இந்த வாக்குவாதம் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமோ என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில் தேர்தல் நெருங்கும் சமயம் கூட்டணிகளுக்குள்ளாக இதுபோன்ற விவாதங்கள் எழுவது வாடிக்கையான விஷயம்தான் என கூலாக சொல்கிறார்களாம் கூட்டணி கட்சி வட்டாரங்கள்.