போதையில் கிடந்த மாணவிகள்; மது வழங்கியவர் கைது! – கரூர் போலீஸ் அதிரடி!
கரூரில் மாணவிகள் மது அருந்திவிட்ட சாலையில் கிடந்த வழக்கில் மது வாங்கி தந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் 3 பேர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அவர்கள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நடுரோட்டிலேயே போதையில் கிடந்துள்ளனர்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் மது போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவர்களை அங்குள்ள மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
பள்ளி மாணவிகள் மூவரும் ஒயின் குடித்தால் உடல் நிறம் வெள்ளையாக மாறும் என ஆசைப்பட்டு குடித்ததாக கூறியுள்ளனர். மேலும் மாணவிகள் நேரடியாக சென்று மது கேட்டால் தரமாட்டார்கள் என்பதால் பசுபதிபாளையத்தை சேர்ந்த 22 வயதான தினேஷ் என்பவரிடம் பணம் கொடுத்து வாங்கி தர சொல்லியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணையில் அறிந்த போலீஸார் தினேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.