அதிமுக வழியில் பாஜக: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து காரி துப்பும் போராட்டம்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை கொச்சைப்படுத்திய, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பாஜக சார்பில் காரி துப்பும் போராட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு வந்த போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு ஜெயலலிதா மதிய விருந்து அளித்தார். இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சில கருத்துக்களை முன்வைத்தார்.
இதனையடுத்து, ஜெயலலிதா மற்றும் நரேந்திர மோடி குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறி, அவரது கொடும்பாவியை எதிரித்து தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரமதர் நரேந்திர மோடி சந்திப்பை கொச்சைப்படுத்தி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை கொச்சைப்படுத்திய, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பாஜக சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, பாஜக கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் காரி துப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப்படத்தின் மீது பாஜகவினர் காரி உமிழ்ந்து போராட்டம் நடத்தினர்.
இதே போல, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து பாஜக சார்பில், சென்னையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து, தமிழகத்தில், அதிமுக மற்றும் பாஜக சார்பில் தினசரி கண்டனப் போராட்டம் வெடித்த வண்ணம் உள்ளது.