திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:30 IST)

அதிமுக – திமுக இடையே கோஷ்டி மோதல்! பலர் மருத்துவமனையில்..!? – கரூரில் பரபரப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் கரூரில் அதிமுக – திமுகவினரிடையே மோதல் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடையேயும் அடிக்கடி மோதல்கள் எழுந்து வருகின்றன.

நேற்று இரவு கரூர் மேற்கு நகர திமுக துணை செயலாளர் கார்த்திகேயன் நெடுஞ்சாலை உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த அதிமுக கரூர் தெற்கு நகர செயலாளர் ஏகாம்பரத்திற்கும், கார்த்திகேயனுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் கை கலப்பாக மாற இரு தரப்பினரும் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுகவினர் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற ஏகாம்பரம் மற்றும் சிலர் வீட்டின் மீதும், காரின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கரூரில் பரபரப்பு எழுந்துள்ளது.