கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!
கந்த சஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவிலிலும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் உள்ள முருகன், தங்க கவசம், வைர கிரீடத்துடன் காட்சி அளிக்கிறார். ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. இன்று மலை கோவிலில் இருந்து முருகப்பெருமான் கீழே வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று கந்த சஷ்டியை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு வாசனை திரவியங்கள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தங்க கவசம், வைர கிரீடம், வைரவேல் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர் சுவாமிநாதன் காட்சியளித்தார். அவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran