வேட்பாளரே அறிவிக்காத தொகுதிக்கு வாக்கு கேட்ட ஜோதிமணி!
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் காலியாக இருக்கும் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் இன்னும் அரவக்குறிச்சி தொகுதிக்கு திமுக, வேட்பாளரையே அறிவிக்கவில்லை
அரவக்குறிச்சி தொகுதியில் சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிதான் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி தனது வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருவதால், அந்த நன்றிக்கடனுக்காக வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே செந்தில்பாலாஜிக்கு ஜோதிமணி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் கரூர் தொகுதியில் ஜோதிமணி வெற்றி பெற்றால் தனது வெற்றியும் உறுதி என செந்தில் பாலாஜி நம்புவதாகவும் கூறப்படுகிறது