வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (15:31 IST)

ட்ரம்ப்பைக் கூட கூட்டணிக்கு அழைப்பார் ஸ்டாலின் – ஜெயக்குமார் கிண்டல் !

தேர்தலில் கூட்டணி அமைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கூட திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பார் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 7 மக்களவைத் தொகுதிகளையும் 1 மாநிலங்களவை தொகுதியையும் பெற்றுள்ளது. தங்களை விட பலம் குறைந்த கட்சியான பாமக அளவுக்குத் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கவேண்டுமென அதிமுகவிடம் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக அதற்கு ஒத்துக்கொள்ளாததாகத் தெரிகிறது.  தேமுதிகவைக் கூட்டணிக்குள் இழுக்க ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்த பாஜக வும் தங்களுக்கான சீட்களைப் பெற்றுக்கொண்டபின் தேமுதிகவை டீலில் விட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிமுகவுடனானக் கூட்டணி இன்னும் கையெழுத்தாகாமல் இருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது திமுக. பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியாததால் தேமுதிகவையாவது திமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என திமுக இரண்டாம் மட்டத்தில் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். இதனையடுத்து தேமுதிக திமுக கூட்டணிப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளால் அதிமுக மற்றும் பாஜக ஆகியக் கட்சிகள் பயந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த சந்திப்புக் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘ தேமுதிக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றுள்ளது. எங்கள் கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் பயந்துள்ளார். விஜயகாந்துடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்று அவர் கூறுகிறார். அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கூட்டணிக்கு அழைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை ‘ எனக் கேலி செய்துள்ளார்.