வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (08:58 IST)

திமுகவா ? அதிமுகவா ? – தேமுதிகவில் தொடரும் குழப்பம் !

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக திமுக அணியில் சேர்வதா அல்லது அதிமுக அணியில் சேர்வதா என்ற குழப்பம் இன்னும் தேமுதிக வில் தொடர்ந்து வருவதாகத் தெரிகிறது.

தேமுதிக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தாமல் மௌனமாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்தின் வருகை ஆகியக் காரணங்களால் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகக் கூட்டணியில் தேமுதிக விற்கு மிகவும் குறைவான சீட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை விடக் குறைந்த பலமுள்ள கட்சிகளாக பாமக மற்றும் பாஜக அளவுக்குக் கூட தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

இதனால் பாமக அளவுக்குத் தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கவேண்டுமென தேமுதிக கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு அதிமுக அதற்கு ஒத்துக்கொள்ளாததாகத் தெரிகிறது.  தேமுதிகவைக் கூட்டணிக்குள் இழுக்க ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்த பாஜக் வும் தங்களுக்கான சீட்களைப் பெற்றுக்கொண்டபின் தேமுதிகவை டீலில் விட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிமுகவுடனானக் கூட்டணி இறுதி செய்வதில் தேமுதிக குழப்பத்தில் உள்ளது.

இதற்கிடையில் பாமகவைதான் கூட்டணிக்குள் கொண்டுவர முடியாததால் தேமுதிகவையாவது திமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என திமுக இரண்டாம் மட்டத்தில் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர். இதனையடுத்து தேமுதிக திமுக கூட்டணிப் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கூட்டணித் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதமாக பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலும் அவரால் கூட்டணியையும் தேவைப்படும் தொகுதிகளையும் இறுதி செய்ய முடியவில்லை என்பதால் இப்போது அதிகாரம் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனிடம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுதிஷின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு திமுகவோடுக் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பிக்க தேமுதிக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் தேமுதிக இடம்பெறும் கூட்டணித் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.