ஜெ. இட்லி சாப்பிட்டார்; சாப்பிட பழகிக்கொண்டு இருக்கிறார் என குழப்புகிறார்கள் - இளங்கோவன்
ஜெயலலிதா அரை இட்லி சாப்பிட்டார், சாப்பிட பழகிக்கொண்டிருக்கிறார் என்று செய்தி வருகிறது. இப்படி தமிழக அரசின் செயல்பாடு குழப்பமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ரூபாய் 500, ரூபாய் 1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து ஈரோட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய இளங்கோவன், "எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மோடியின் அறிவிப்பு ஏழை மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 92 சதவீதம் பேர் தனக்கு ஆதரவு என்கிறார் மோடி. ஆனால் 92 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது அந்நாட்டு அரசின் பிடில் வாசித்ததாக சொல்வார்கள். அதேபோல கடந்த 8ஆம் தேதி 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மோடி, மறுநாள் 9ஆம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்று விழாவில் கலந்து கொண்டர்.
தமிழக அரசு வருவாய்த்துறை, கருவூலத்துறை, கூட்டுறவுத்துறை மூலம் பணபரிவர்த்தனை செய்திருந்தால் மக்களுக்கு சிரமம் குறைந்திருக்கும். ஆனால் தமிழக அரசு முடங்கியிருக்கிறது. நேற்று காலை அரை இட்லி சாப்பிட்டார் என செய்தி வருகிறது. இன்று சாப்பிட பழகிக்கொண்டிருக்கிறார் என்று செய்தி வருகிறது.
வேட்புமனு படிவத்தில் கைநாட்டு வைக்கிறார். அறிக்கையில் கையொப்பமிடுகிறார் என செய்தி வருகிறது. இப்படி தமிழக அரசின் செயல்பாடு குழப்பமாக உள்ளது. மத்திய அரசின் செயலால் மக்கள் அமைதியாக போராடி வருகின்றனர். அப்போது எப்போது வேண்டுமானாலும் பெரும் போராட்டமாக வெடிக்கும்" என்றார்.