புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:18 IST)

பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கிறதா ? மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. எனவே பாஜக இரண்டாம் முறையாகப் பதவியேற்று ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆனதையொட்டி, பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நம் நாடு என்றுமே இல்லாத வகையில், கடும் பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன்சிங் சமீபத்தில் தற்போதைய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, கோட்டு போட்டு மழையில் நனைபவர் என பாஜக,  அவரை விமர்சித்ததாகத் தகவல் வெளியானது.
 
இதையடுத்து,பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங்கின் அறிவுறையை கேட்டுக்கொள்ளுவது நல்லது என அறிவுறுத்தினார். 
இதற்கிடையே பொருளாதார மந்தத்தையும், மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள நுகர்வுகுறைவு மற்றும் வேலைவாய்ப்பை சரிசெய்யவும், நாட்டில் முக்கியமாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் பங்குச் சந்தைகளும், பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் லேசாக  மீண்டுவருகின்றன. 
 
எனவே, நாடு பொருளாதார மந்தத்தில் உள்ளபோது,பாஜக இரண்டாம் முறைப் பதவியேற்றதன் 100 வது நாளைக் கொண்டாடுவதாக காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது :நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததற்கு  ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள குழப்பங்களே காரணம். முதலில், இவற்றை, பாஜகவின் மத்திய அரசு, சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ,கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இப்படியிருக்க, நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் சோர்வும், சமீபத்தில் அக்கட்சி தலைவர்  ராகுல்காந்தி, தேர்தல் தோல்வியின் பொருட்டு பதவிவிலகியதும், பாஜகவிற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. அதனால்தான் பல காங்., தலைவர்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.
 
இது தேசிய அரசியலில் சகஜம் என்றாலும், தமிழ்நாடு மாநில அரசியலில் எதிரும் புதிருமான திமுக - அதிமுக கட்சியினரின் மோதல்கள் உலகம் அறிந்தது. மத்தியில் பாஜக ஆட்சி உள்ளபோதும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு  அமைச்சர் பதவி வழங்காதது சற்று ஏமாற்றம்தான்.
சென்ற முறை மத்திய அமைச்சராகப் பதவிவகித்த பொன். ராதா கிருஷ்ணனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு, அதிமுகவில், ஓபிஎஸ் மகன் எம்.பி., ரவீந்தரநாத் குமாருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ,அதிமுகவின்   மாநில - மக்களவை உறுப்பினர்கள், பாஜகவின் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர இந்தியா ’ஹிந்து நாடு’ என்று அதிமுக எம்.பி., ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் மதம் தாண்டிய பண்பட்ட தமிழ்நாட்டுக்கு முறையாக என்ன திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்வைத்துள்ளது ? எனக் கேட்டால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்வர். பிறகு, மக்களின், மற்ற தேவைகள் எல்லாம் எப்போது நிறைவேறுமெனக் கேட்டால்... அதற்கு இங்குள்ள பாஜக தலைவர்களிடம்  விடையில்லை.
சமீபத்தில் ரயில்வே பொதுத்துறை தேர்வில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. தற்போது, ’ஒரே நாடு , ஒரே ரேஷன்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அமைச்சர்களை விட மாநில அமைச்சர்கள் தான் அதிக ஆதரவு தந்து, பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் ஆகப்பெரிய விஷயமாக உள்ள பிரச்சனையான ’காவிரி நதிநீர் பங்கீடு ‘குறித்து பேசத்தான் ஆளில்லை...? 
 
கஜா புயல் பாதிப்பால் தமிழ்நாடு மற்றும் விவசாய நிலப்பரப்பை உள்ளடக்கிய  டெல்டா பகுதியே ஸ்தம்பித்து நின்ற போது,  முதல்வர் பழனிசாமி நிவாரண நிதி கேட்டு மத்திய பிரதம அமைச்சரவையை அணுகினார். அதற்கு, சில நூறு கோடிகள் கொடுத்து அவரை திரும்பி அனுப்பினர். ஆனால், இங்குள்ள தேவைகள் பேரழிவுகளை சரிசெய்ய சில ஆயிரம் கோடிக்கும் மேல் தேவைப்பட்டது . இந்த நிலையில்,   தமிழக ஆட்சியாளர்கள், சமீபத்தில் சில ஆயிரம் கோடி ரூபாயை, தமிழகத்தில் உள்ள  திட்டத்திற்கு பயன்படுத்தாமல் அதை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். 
 
இப்படியே போனால் தமிழர்களின் எண்ணத்துக்கு புத்துயிரூட்ட மக்களின் தேவைகளை சந்தித்து நிறைவேற்ற மாற்று அரசுதான் வர வேண்டுமா? என்பதை மத்திய மற்றும் தமிழ்நாடு ஆட்சியாளர்கள்தான் இனித் தீர்மானிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒருமித்த குரலாக எதிரொலிக்கிறது.