திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (12:21 IST)

பெரியபாண்டி உடலில் பாய்ந்தது சக காவலரின் குண்டா?: அதிர வைக்கும் சந்தேகங்கள்!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நேற்று மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது. கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
 
சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வடமாநில கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையில் 4 பேர் ராஜஸ்தான் சென்றனர். நேற்று முன்தினம் கொள்ளையர்களை அவர்கள் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார்.
 
ராஜஸ்தானின் கிராமம் ஒன்றில் தங்கியிருந்த கொள்ளையர்களின் இருப்பிடத்தை சுமார் 4 நாட்கள் பெரியபாண்டி தலைமையில் சென்ற காவலர்களின் தேடலுக்கு பின்னர் கண்டறிந்துள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அந்த கிராமத்திற்குச் சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் இருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
 
அந்த வீட்டிற்குள் நுழைந்ததும், கொள்ளையற்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற 4 காவலர்களும் தப்பிச்சென்றனர்
 
இந்த விவகாரத்தில் பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது கொள்ளையர்களின் குண்டா அல்லது சக காவலரின் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டா என ராஜஸ்தான் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ராஜஸ்தான் காவல்துறைக்கே தெரியாதாம்.
 
அந்த இடத்தில் 3 கொள்ளையர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்ற தவறான தகவலின் அடிப்படையில் தமிழக போலீசார்கள் அங்கு நுழைந்துள்ளனர். ஆனால் அங்கு 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருந்துள்ளனர். போலீசார் அங்கு நுழைந்ததும் இரு தரப்பினருக்கும் சண்டை மூண்டது. அதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தவறி அவர்களிடம் சிக்கியிருந்திருப்பார்.
 
அப்போது தான் அவருடன் வந்த சக காவலர் அவரை காப்பாற்ற கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த குண்டு தவறி பெரியபாண்டியன் மீது பாய்ந்திருக்கலாம் என ராஜஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
மேலும் ராஜஸ்தான் போலீசார் வைக்கும் சந்தேகங்கள்:
 
* கொள்ளையர்கள் தங்கள் தலைமை காவலரை சுடும்போது, அவருடன் வந்த மற்ற நான்கு சக காவலர்களும் ஏன் கொள்ளையர்களை நோக்கி பதிலுக்கு சுடவில்லை?
 
* கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் வரை வந்த தமிழக போலீசார், உயர் அதிகாரிகளிடம் கொள்ளையர்களைச் சுட அனுமதி வாங்கவில்லையா?
 
* அனுமதி வாங்கியிருந்தால் ஏன் கொள்ளையர்களை நோக்கி திருப்பி சுடவில்லை?
 
* கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கற்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது.
 
* கொள்ளையர்கள் ஒருவர்கூட சிக்காமல் தப்பியோடியது எப்படி?