ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது - அன்புமணி!
தமிழர்களை கொன்ற ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது என அன்புமணி டிவிட்டரில் பதிவு.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. அதை தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.
இலங்கை கடற்படை தளபதி இல்லத்தில் ராஜபக்சே குடும்பத்தினர் பதுங்கியுள்ளதாக ஒரு புறமும், மற்றொரு புறம் ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி இந்தியா வந்து அடைக்கலமடைந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் தமிழர்களை கொன்ற ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது. ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐநா மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது.
அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது. போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தூதரகம், ராஜபக்சே இந்தியா வந்துவிட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை. ஆதாரமற்ற அந்த தகவலை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது.