நான் என் காதலனுடன்தான் வாழ்வேன்!' - அழுது புரண்ட காதலி... பிரிக்க முயன்ற போலீஸ்
காதல் ஜோடியை பிரித்து, காதலியை மட்டும் பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் முயன்றனர். ஆனால் காதலி அழுது புரண்டதால் இறுதியில் காதலனுடன் போலீசார் சேர்த்து வைத்த சம்பவம் குமரி மாவட்டம் குளச்சலில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரைச் சேர்ந்தவர் விஜயராஜ் (35). இவரும் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான டயானா என்பவரும் கடந்த ஒன்பது வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் டயானா குடும்பத்தைவிட விஜயராஜ் மிகவும் ஏழ்மையாக இருந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்ததால், டயானாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் காதலை வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் டயானாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கியுள்ளார் அவரது தந்தை. இதை அறிந்த விஜயராஜ் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் ஒட்டசேகர மங்கலம் பகுதிக்கு டயானாவை அழைத்துச் சென்றார். இருவரும் ரகசியமாகப் பதிவு திருமணம் செய்துள்ளனர். மீண்டும் ஊருக்கு வந்த அவர்கள் திருமணம் செய்துகொண்டதை மறைத்துவிட்டு தங்கள் வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜயராஜ் டயானாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டயானாவின் தந்தை சூசையா, டயனாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வீட்டு சிறையில் வைத்துள்ளார்.
இது குறித்து விஜயராஜ் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நித்திரவிளை காவல் நிலையத்தில் தனது மனைவி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். மேலும் தனது மனைவி டயானாவை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக விஜயராஜ் மற்றும் டயானாவை நேற்று மாலை அழைத்திருந்தார். போலீஸ் நடத்திய விசாரணையில், தான் விஜயராஜுடன் வாழ்க்கை நடத்தியது உண்மைதான், நான் மேஜர் அவருடன் செல்வேன் என்று டயானா திட்டவட்டமாக தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த டயானாவின் தந்தை, தன் மகளை தன்னுடன் திரும்ப அனுப்பி வைக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் பெண் போலீஸார், டயானாவை தனியாக அழைத்துச் சென்று பெற்றோருடன் செல்லுமாறு கூறினார்களாம். அவர் மறுக்கவே சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார், டயானாவை குண்டுகட்டாக காரில் ஏற்றிப் பெற்றோருடன் அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளனர். டயானா சத்தம் போட்டு அலறி காரில் ஏற மறுத்து உருண்டு புரண்டார். இதைப் பார்த்த விஜயராஜும் அவரின் வழக்கறிஞரும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டனர். சுதாகரித்துக் கொண்ட போலீஸார், டயானாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் டயானாவை அவரின் காதலன் விஜயராஜுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.