தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை- நிர்மலா சீதாராமன்
தேர்தலில் செலவிடும் அளவிற்குப் போதுமான பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் அமைச்சராக இருப்பர்களுக்கே பாஜக தலைமை வாய்ப்பளித்ததாக தகவல் வெளியானது.
அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரபல தனியார் மீடியா நிகழ்ச்சில் ஒன்றில் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அதில், தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை. தமிழ் நாடு அல்லது ஆந்திராவில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பளித்தது. ஆனால் தேர்தலில் செலவிடும் அளவிற்குப் போதுமான பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.