திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (14:08 IST)

”ஜெயலலிதாவை சந்திக்கவில்லை; தலைவர்களை பார்த்தேன் ” - வருந்தும் திருமாவளவன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை. என்றாலும் அங்கிருந்த அதிமுக தலைவர்களுடன் சந்தித்து பேச முடிந்தது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 

 
முதலமைச்சர் ஜெயலலிதாவை காண இன்று திருமாவளவன் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் 2வது மாடிக்கு சென்றார். ஆனால், ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல், அங்கிருந்த அதிமுக தலைவர்களை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய திருமாவளவன், ”முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவியுள்ளது. எனவே அவர் உடல்நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
 
அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரை நேரில் சந்திக்க இன்று நான் மருத்துவமனைக்கு வந்தேன். முதலமைச்சர் சிகிச்சை பெறும் 2ஆவது மாடிக்கு நான் சென்றேன். அங்கு எந்த கெடுபிடியும் இல்லை. அங்கு அதிமுக மூத்த தலைவர்கள் இருந்தனர்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை. என்றாலும் அங்கிருந்த அதிமுக தலைவர்களுடன் சந்தித்து பேச முடிந்தது. அவர்களிடம் முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைய விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வாழ்த்துகிறேன். நான் இங்கு வந்ததில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை” என்றார்.