ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (18:41 IST)

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் கண்டு களித்த நிலையில், சரியான முன்னேற்பாடு இல்லை என தமிழக அரசு மற்றும் ரயில்வே துறை மீது பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இன்று காலை 11 மணி முதல் சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை காண மூன்று லட்சம் பேர் வருவார்கள் என்று தமிழக அரசு எதிர்பார்த்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தது. ஆனால், 15 லட்சம் பேர் வரை பங்கேற்றதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில், பேருந்து உள்பட சரியான வசதிகள் இல்லாமல் மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் ரயில்களில் கூட்டம் அதிகரித்த நிலையில், அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயிலில் மிகப்பெரிய அளவில் கூட்டம் குவிந்தது. இதனால், பலர் விமான சாகச காட்சியை பார்க்காமலேயே வீட்டுக்கு திரும்பியதாகவும் தெரிகிறது. அதேபோல், நிகழ்ச்சி நடந்த சென்னை மெரினா கடற்கரையில், தமிழக அரசு போதுமான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும், குறிப்பாக தண்ணீர் கூட கிடைக்காமல் பலர் திண்டாடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் பலியானதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிந்து, வீட்டுக்கு திரும்புவதிலும் பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva