திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (10:17 IST)

குடியைக் கெடுத்த குடி – அனாதையான 8 மாதக் குழந்தை !

புதுச்சேரியில் கணவனின் குடிப் பிரச்சனையால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், ராஜாமணி தம்பதிக்கு 8 மாதக் குழந்தை ஒன்று உள்ளது. சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் சரவணன் கடினமான வேலைக் காரணமாக குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சரவணன் குடியை நிறுத்தவில்லை.

இதையடுத்து வழக்கம்போல நேற்றும் சரவணன் குடித்துவிட்டு வர ராஜாமணிக்கும் அவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார் சரவணன். அவர் திரும்பி வந்து பார்த்தபோது ராஜாமணி தூக்கில் தொங்கியுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன், தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

உறவினர் ஒருவருக்கு போன் செய்து தனது தற்கொலை முடிவை சொல்லிவிட்டு மனைவிக்கு அருகிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். உறவினர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து பார்க்கையில் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கி இறந்துள்ளனர். அவர்களின் குழந்தை மட்டும் வீட்டில் இருந்தது. குடிப்பழக்கத்தால் ஒருக் குடும்பமே சிதைந்து ஒரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.