புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (17:21 IST)

”பட்டியலினத்தவருக்கு தனி மயானம் உள்ளதா??”..மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் பட்டியல் இனத்தாருக்கும் மற்றும் பழங்குடியினருக்கு தனி மயானம் உள்ளதா? என மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக கிராமங்களில் பட்டியலினத்தவர்கள் மேல் ஆதிக்க ஜாதியினரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு அளவில்லாமல் போய் கொண்டிருக்கும் வேளையில் கடந்த மாதம் வேலூரின் வாணியம்பாடி அருகே பட்டியலினத்தவரின் சடலத்தை பாலாற்றின் மேம்பாலம் வழியே எடுத்துச் செல்ல ஆதிக்க ஜாதியினர் தடுத்ததால் கயிறு கட்டி சடலத்தை இறக்கிய செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

தொழில்நுட்பத்திலும், உடுத்தும் உடைகளிலும் நவீனத்தை தேடி ஓடும் தமிழகத்தினர், ஜாதி என்று வந்துவிட்டால் பழைய பஞ்சாங்கம் தான். இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் பட்டியல், பழங்குடி இனத்தவர்களுக்கு தனி மயானம் உள்ளதா? என கேள்வி கேட்டு அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வாணியம்பாடி விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பட்டியலினத்தாருக்கு தனி மயானம் அளிப்பது சாதி பிரிவினையை ஊக்குவிப்பது போல் உள்ளது என கூறியது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பட்டியல் இனத்தாருக்கும், பழங்குடியினருக்கும் தனி மயானம் இருக்கிறதா? என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.