திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (20:57 IST)

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

RN Ravi
தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க வரலாறு மட்டுமே நிறைந்துள்ளது என்றும்   சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தமிழக பாட புத்தகத்தில் இடம்பெறவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களின் 2 நாள்  மாநாடு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை பல்கலைக்கழகங்களின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி நேற்று  தொடங்கி வைத்தார். 
 
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மாநாட்டின் நிறைவு உரையை நிகழ்த்திய, ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் திராவிட இயக்க வரலாறு நிறைந்துள்ளது என்றும் இது மட்டுமே வரலாறு இல்லை என்றும்  தேசிய அளவிலான சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து தமிழக பாட புத்தகத்தில் இடம்பெறவில்லை என்றும் விமர்சித்தார்
 
வேலுநாச்சியார், கட்டபொம்மன் ஆகியோர் பெயர்கள் சமூக அறிவியல் மற்றும் வரலாறு பாட புத்தகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.  ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நில உரிமையாளர்களுக்கு தமிழர்கள் விற்கப்பட்ட வரலாறு பாட புத்தகத்தில் இடம்பெற வேண்டாமா? என கேள்வி எழுப்பிய ஆளுநர்,  மாணவர்கள் மத்தியில் எதைப் படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்று கடுமையாக சாடினார்.

 
எனவே இளங்கலை அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெற வேண்டும் என்றும் பாடத்திட்டத்தில் விடுதலை போராட்ட வரலாறு பாடங்கள் இடம்பெறுவதை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.