தமிழகம் முழுவதும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 அரசு மருத்துவமனைகளில், ரூ.210 கோடி ரூபாயில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுத்துள்ளார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மருத்துவ வசதிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகளில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. ஊராட்சி, மற்றும் கிராம சுகாதார மையங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முறையாக செயல்பட்டு வருகின்றன.
மேலும் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை முறைகளும் தமிழகத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டன.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.18 லட்சம் மதிப்பில், 8 படுக்கை வசதிகளுடன் கூடிய வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 10 அரசு மருத்துவமனைகளில் ரூ.210 கோடி ரூபாய் செலவில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளதாக கூறினார்.
மேலும் அவர், கூடிய விரைவில் அதற்கான பணிகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை மேற்கொள்ளவுள்ளது எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.