போராட்டக்காரர்களை கைது செய்யக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை சேலம் வழியிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை, 277 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அமையவிருக்கும் இத்திட்டத்தின் மதிப்பு 10,000 கோடி ஆகும். 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் வழியே இந்த சாலை அமையவுள்ளது.
இதறகான நிலம் கையகப் படுத்தலின் போது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே சென்னையிலிருந்து சேலத்திறகு இரண்டு நெடுஞ்சாலைகள் இருக்கும் போது சுற்றுசூழலுக்குக் கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை உடனே அரசு கைவிட வேண்டுமென போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்து நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது.
போராட்டக்காரர்கள் கைது தொடர்பாக நீதிமன்றத்தில் பல பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம். எட்டு வழி சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக்கூடாதென காவல்துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.