தீபாவளி தினத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. பட்டாசு வியாபாரம் பாதிக்குமா?
தீபாவளி தினம் மற்றும் அதற்கான இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வியாபாரம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் தென்னிந்திய கிழக்கு கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால், அக்டோபர் 31 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 1 ஆம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும், நவம்பர் 2 ஆம் தேதி தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை தீபாவளி தினத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran