வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (16:35 IST)

கனமழை, பேருந்து ஸ்ட்ரைக், கிளாம்பாக்கம்..! பகீர் கிளப்பும் பொங்கல் பயணம்!

TNSTC
அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்டு வரும் சில நிகழ்வுகள் பொங்கல் பயணத்தை மேலும் கடுமையானதாக ஆக்கிவிடுமோ என்ற பீதி மக்களிடையே எழுந்துள்ளது.



ஆண்டுதோறும் தை முதல் நாள் அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன. பொங்கல் சிறப்பு பேருந்துகள், ரயில் முன்பதிவுகள் எல்லாம் சில மாதங்கள் முன்னரே தொடங்கி முடிந்துவிட்டது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக சென்னை பெருநகரில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டும் ஏராளமான மக்கள் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது அதிருப்தியையும், குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஊர் செல்லும் பேருந்துகளை பிடிக்க சென்னைக்கு உள்ளிருந்து மணி கணக்காக பயணம் செய்து கிளாம்பாக்கம் போக வேண்டியிருப்பதை குறையாக கூறி வரும் மக்கள் பலர் பொங்கல் முடியும் மட்டிலாவது பேருந்து முனையம் தொடர்ந்து கோயம்பேட்டில் இயங்க செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.



ஆனால் அரசு தரப்பில் கிளாம்பாக்கம் செல்ல சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து இயக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் உள்ளூர், வெளியூர் பேருந்து நிலையங்கள் இடையே கட்டப்பட்டிருந்த சுவர் குறையாக சொல்லப்பட்ட நிலையில் அதை இடித்து அந்த வழியாக இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் சென்று வரும் வகையில் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


எனினும் கணக்கிலடங்கா மக்கள் ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் சென்று சேரவே மாநகராட்சி போக்குவரத்து கழகம் ஏராளமான உள்ளூர் பேருந்துகளை இயக்க வேண்டி வரும் என்பதால் வழக்கம்போல போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் போகிறது என்பது சாமனியர்கள் சிலரின் யூகமாக உள்ளது.

Chennai Rain


இந்த பொங்கல் பயணத்தை மேலும் கடினமானதாக ஆக்கும் வகையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மார்கழியை ஒட்டி நடைபெறும் பல நிகழ்ச்சிகள், புத்தக கண்காட்சி உள்ளிட்டவை இந்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பொங்கல் சமயத்தில் இவ்வாறு மழை பெய்தால் மக்கள் சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் செல்லவும், அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லவும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.


தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என போக்குவரத்து சங்கத்தினர் ஸ்ட்ரைக் செய்வதாக அறிவித்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த ஒரு வாரத்திற்குள் போக்குவரத்து சங்கத்தினர் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று பேருந்தை இயக்கினால்தான் பொங்கல் பயணம் பலருக்கும் திட்டமிட்டபடி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அமையும் என்று கூறப்படுகிறது. மழை கூட இந்த வார இறுதிக்குள் நின்று சகஜ நிலை திரும்பி விடலாம்.

ஆனால் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் வாபஸ் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல சரியான திட்டமிடலுடன் கூடிய உள்ளூர் பேருந்துகளை ஏற்பாடு செய்தல் அல்லது கோயம்பேட்டிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குதல் என இந்த விவகாரங்களில் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுப்பதுவே பொங்கல் பயணம் பொதுமக்களுக்கு சிறப்பானதாக அமைவதற்கான சரியான வழியாக இருக்கும்.

Edit by Prasanth.K