இன்றிரவு 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, நவம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்றும், நவம்பர் 8, 9 தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva