வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வங்கக் கடலில் வரும் 7ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை, அதாவது நவம்பர் 5ஆம் தேதி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்படுவதன் காரணமாக நவம்பர் 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே இன்று புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவலாம் என்றும், அதனால் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை புயல் சின்னம் வலுவடைந்து தமிழக கரையை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் நவம்பர் 7 முதல் 11 வரையிலான நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva