ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க முயன்றதால் தீக்குளித்த இளைஞர்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..
கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் கடந்த 4ம் தேதி ஆக்கிரமிப்பு வீட்டை வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்தார். அதன்பின் அவர் 85% தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி நேதாஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ராஜ்குமார் என்பவர் தனது வீட்டிற்கு பட்டா இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அது அது ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறிய வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடிக்க முயற்சி செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் வீட்டுக்குள் சென்று மண்ணென்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய் துறையினர் உடனே
தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து 85% தீக்காயம் அடைந்த ராஜ்குமாரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவரை சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் கோமதி, வி.ஏ.ஓ பாகிய ஷர்மா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva