ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (09:30 IST)

இனிப்புக்கு ஜிஎஸ்டி குறைவு.. காரத்துக்கு அதிகம்! கஸ்டமர்ஸே கலாய்க்கிறாங்க? - நிதியமைச்சரிடம் நேரடியாக புலம்பிய உணவக உரிமையாளர்

Nirmala seetharaman

கோவையில் நடந்த தொழில்துறையினருடனான சந்திப்பில் உணவக உரிமையாளர் ஒருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரடியாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து புகார் அளித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலில் உள்ள நிலையில், ஒவ்வொரு பொருளுக்கும், சேவைக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் சதவீதம் மாறுபடுகிறது. இது தொடர்பாக அவ்வபோது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு வரி விகிதங்கள் மாற்றம், நீக்கம் ஆகியவை நடக்கின்றது.

 

இந்நிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அதில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் என்பவர் நகைச்சுவையான தொனியில் ஜி.எஸ்.டியால் ஏற்படும் சிரமங்கள் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
 

 

அதில் அவர், பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு வகை ஜிஎஸ்டி வரி விதிப்பது சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். ”இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டியும், கார வகைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. எங்க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். தினம் வந்து ஜிலேபி சாப்பிடுகிறார். காபி சாப்பிடுகிறார். பின்னர் காரமும் சாப்பிடுகிறார். ஆனால் காரத்திற்கு விலை அதிகமாக இருப்பதாக சண்டை போடுகிறார். ஒரே பில்லில் வெவ்வேறு உணவுகளுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி போட்டு தருவது கடினமாக உள்ளது. பேக்கரி ஐட்டங்களில் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதுக்குள்ள ஒரு க்ரீமை வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதை சொன்னால் கஸ்டமர் ‘நீங்க பன்னை மட்டும் குடுங்க, க்ரீமை நாங்க போட்டுக்குறோம்’ என்கிறார்கள்” என நகைச்சுவையாக ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்

 

மேலும், எல்லா பேக்கரி வகைகளுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி சதவீதத்தை வைக்க வேண்டும். அது கூடுதலாக இருந்தாலும் சரி. குறைவாக இருந்தாலும் சரி என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K