அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!
அரசு இயற்றும் அனைத்து மசோத்தக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும், மசோதாக்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க ஆளுநருக்கு முக்கிய அதிகாரங்கள் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் கிடப்பில் போட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது, மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன் என ஆளுநர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தரப்பு சில வாதங்களை இன்று முன்வைத்துள்ளது.
ஆளுநர் எல்லா சூழ்நிலையிலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அவருக்கு நான்கு அதிகாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது ஆகிய அதிகாரங்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மசோதாக்களில் இரு தரப்புக்குமான சாதகமான பரிந்துரைகளை சேர்க்கவே ஆளுநர் முயற்சிக்கிறார் என்றும், சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் இணைந்து முடிவு எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்றும் வாதத்தில் முன்வைக்கப்பட்டது.
இறுதி முடிவு எடுக்க, குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பலாம் என்று மாநில அரசை ஆளுநர் கேட்கலாம் என்றும், இதில் எதுவும் மாநில உரிமை பறிப்பதாக கருத முடியாது என்றும் ஆளுநர் தரப்பு வாதம் செய்துள்ளது.
இதனை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva