முதல்வரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை.. தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேற்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை அடுத்து, இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக, ஜாக்டோ-ஜியோவில் உள்ள பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
10 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர். ஆனால், அரசு இதற்கு சரியான பதில் வழங்கவில்லை என்றும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோரிக்கைகள் என்னென்ன?
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலவரை இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்க வேண்டும்.
உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பழனிக்காலத்தை முறைப்படுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளில் 30%க்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இந்த நிலையில், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்பதால், இன்று ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran