வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 13 ஜூன் 2020 (22:32 IST)

முருங்கைக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய அரசு நிறுவனம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் விளையும் முருங்கைக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய அரசு சார்பில் சுமார் 3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நிறுவனம் அமைக்க இருப்பதாக மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியளித்தார்.

 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மழை இன்றி வறண்ட பகுதி. இந்தப் பகுதியில் முருங்கைக்காய்கள் பிரதான விவசாயமாக விவசாயிகள் செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகம் இருக்கும் சமயங்களில் 1 கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாகவும், விளைச்சல் குறைவாக உள்ள சமயங்களில் 1 கிலோ 100 ரூபாய் வரை இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே போன்று செங்காந்தள் மலர் விவசாயத்தில் அதன் விதை மிக குறைவான விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் பல ஆயிரக் கணக்கில் விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் இவற்றை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விறபனை செய்ய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முருங்கை மற்றும் செங்காந்தள் மலர் விவசாயிகளை ஒன்றிணைத்து புதிதாக சங்கத்தை உருவாக்க உள்ளதாகவும், அவர்களுக்கு கிடைக்க கூடிய நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும், இப்பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் முருங்கைக்காய் பவிடர் செய்து மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்யும் நிறுவனம் 3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.