செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (20:30 IST)

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

Maha Vishnu Arrest
சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  
 
சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிற்போக்குத்தனமாக பேசியதால் சர்ச்சையில் சிக்கிய மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 
 
அப்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த குளத்துபாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர்,
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கிளைகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரித்தனர். 
 
மேலும் அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கு, ஹார்டு டிஸ்க்-ஐ பறிமுதல் செய்தனர். போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு கடந்த 14-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவருக்கு வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி சுப்ரமணி உத்தரவிட்டார்.   

 
இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சிறையில் இருந்து இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை, அக்டோபர் 4ம் தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.