வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:05 IST)

25 ஆண்டுகளாக வேளாங்கண்ணி மாதாவை காண 150 கிமீ நடந்தே வந்த பக்தர்கள்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 
 
மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. 
 
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 29- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8- ந்தேதி வரை நடைபெற உள்ளது.
 
விழாவையொட்டி  பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாத யாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
 
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். 
குறிப்பாக சென்னை, கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குழுவாக யாத்திரிகர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். 
 
இதன் ஒருபகுதியாக  அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கு மேற்பட்டோர்
மாதா உருவம் பொறித்த தேரை தாங்கி  வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக  
கடந்த ஆகஸ்ட்.24 ல் வரதராஜன் பேட்டையில் இருந்து புறப்பட்டனர்.
மீன்சுருட்டி, அணைக்கரை, ஆடுதுறை வடகரை திருவாரூர், நாகப்பட்டினம், கீழ்வேளூர்,சிக்கல், புத்தூர்,பரவை வழியாக சுமார்  150 கிலோமீட்டர் பாதயாத்திரையாக  வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர்.
25 ஆண்டுகளாக நடை பயணத்தை தொடரும் இந்த குழுவினரின் வெள்ளி விழாவை முன்னிட்டு  வடகரை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியோடு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதாவின் கொடி மற்றும் சொரூபம் தாங்கிய தேரோடு ஆவே மரியா மரியே வாழ்க என்ற முழக்கத்தோடு 
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு சென்று கொடியேற்றத்தை காண உள்ளனர். 
வழியில் களைப்பு தெரியாமல் இருக்க மரத்தின் நிழலில் உண்டு ஓய்வெடுத்து மாதாவின் புகழ் பாடி  தங்களது பிரார்த்தனை நிறைவேற வேண்டி ஒவ்வொரு வருடமும் வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத பலரும் குழந்தை பாக்கியம் பெற்றதாகவும் திருமண தடை நீங்கி  திருமணம் நடைபெற்றுள்ளது.
 
மேலும் தங்களது குழந்தைகள் கல்வி செல்வத்தில் சிறந்து விளங்க வேண்டி பிரார்த்தனை வைத்து அது அனைத்தும் நிறைவேறியதாக   பாதயாத்திரையில் வரும் பக்தர்கள் நெகழ்ச்சியோடு சாட்சி கூறியுள்ளனர்.