ஏமாத்திட்டியே தலைவா.. நீங்கதான் முக்கியம்! – கலவையான கருத்துக்களுடன் ட்ரெண்டாகும் ரஜினி ஹேஷ்டேக்!
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை திரும்ப பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் கலவையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். எனினும் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது தான் கட்சி தொடங்கவில்லை என்றும், அரசியலில் ஈடுபடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நலம் மற்றும் இன்ன பிற பிரச்சினைகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ள ரஜினிகாந்த் தனது முடிவுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என ஆர்வமாக எதிர்பார்த்திருந்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்த விரக்தியில் ஏமாத்திட்டியே தலைவா” என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகின்றனர். மேலும் சிலர் ரஜினி கட்சி தொடங்குவதை விட அவரது உடல்நலமே முக்கியம் என பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் #Thalaiva #Rajinikanth உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.