புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (16:05 IST)

’உலக நாயகன் முதற்றே உலகு’ ! கமல்ஹாசனின் அரசியல் தந்திரம் ஜெயிக்குமா ?

உலக நாயகன் கமல்ஹாசன் என்றதுமே ஒது புதுமை சுரப்பி நமது மூளையில் எட்டிப்பார்க்கும். அந்தளவுக்கு பழமையில் தோய்ந்த சினிமாவுக்கு பல புதுமைக் கலைகளைப் புகுத்தியவர் அவர். நடிப்புக்கு சிவாஜி, சண்டைக்கும் மனித நேயத்துக்கு எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு ரஜினிகாந்த் என இருக்கும்  சினிமாவில் ஹாலிவுட் தரத்துக்கு சகலத்தையும் கோலிவுட்டில் இறக்குமதி செய்து,ஒரு சிறந்த ஒப்பனைக்கலைஞராக, இயக்குநராக, கவிஞராக, நடிகராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக , பேச்சாளராக, சமூக ஆர்வலராக, உடல் உறுப்புகளை தானம் செய்த மனித நேயராக, ஓவியராக, நடன இயக்குநராக, பாடகராக, ஒளிப்பதிவாளராக, முறையாக படிக்காவிட்டாலும் பலமொழிகளைக் கற்றுத் தேர்ந்த நிபுணராக, நாடகநடிகராக என சகலகலா வல்லவராக உலகம் எங்கும் தன் திறமையால் புகழ்மாலை சூடிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.

தனது இத்துணை திறமைகளுக்கு மத்தியில் இன்று மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.  சினிமாவில் (மலையாளம் )அவர் ஐந்து வயதில் அறிமுகமானாலும், இயக்குநர் பாலச்சந்தரரின் மாணவராகவே அவர் சகல திறமைகளும் ஒளிவட்டம் போல் மக்களுக்கு தெரிந்தது மட்டுமல்லாமல் அவர் தனது ஆற்றல்களை இந்த ஊடகம் எனும் சினிமா வழியே தனது நடிப்பின் வழியே அப்பட்டமாய் வெளிப்படுத்த முடிந்தது. அதை மக்கள் ஏற்று அவருக்கு உயரிய அங்கீகாரம் அளித்துள்ளனர்.அரசும் அவருக்கான விருதை பலமுறை வழங்கி கௌரவித்துள்ளது. இன்று நடிப்புத்துறையில் வந்து அறுபது ஆண்டுகளைத் தொடும் கமலுக்கு நிகராக இந்திய சினிமாவிலேயே யாரும் கிடையாது என்பதற்கு ஏற்ப அவரது புகழ் வெளிச்சம் விண்ணைத்தொடுகிறது.

ஒரு நடிகராக பல பரிசோதனை முயற்சிகளை அவர் செய்திருந்தாலும் அன்பே சிவம் போன்ற படங்களின் வழியே அவர் மக்களுக்கு சொல்ல வந்த விஷயங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால் அதை மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் போனதுஅவர்களின் துரதிஷ்டம்தான். ஆனால் அதன் வழியே அவரது வருங்காலத்தைக் கணிக்கும்  ஆற்றலைக் கண்டு கொள்ளலாம், சினிமா விஞ்ஞானியாக தனது கலையை எந்த அளவுக்கு முன்னுக்கு கொண்டு செல்லவேண்டுமோ அனைத்தையும் அநாயசமாக ஏழுகடலைத் தாண்டுவதைப் போல் தனது இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தாண்டி வந்துள்ளார். அதில் பல வெற்றிகளையும் சில சோதனைகளையும் கண்டுள்ளார். ஏனென்றால் எதையுமே காப்பி அடித்து செய்பவர்களுக்குத்தான் தோல்வி, தானே முயற்சியில் தீவிரமாய் இறங்குவது சோதனைதான். அதில் இனிமேலும் அவர் வெற்றிபெறுவார். சப்பானியாக இருந்து அபூர்வசகோதர்களாகி, அவ்வை சண்முகியாக உருவெடுத்து, விஸ்வரூபமெடுத்து தசாவரதாரத்தில் பத்து வேடங்களை எடுத்த கமல்ஹாசனுக்கு பிரெஞ்ச் அரசின் செல்வாலியே விருது மட்டுமல்லசினிமா நடிகர்களின் ஆஸ்தான விருதான  ஆஸ்கார் விருதும் நிஜமாலுமே கைகூடும் என்பது அவரது உழைப்பு மற்றும் திறமையின் மேல் உள்ள நம்பிக்கையினால் தான்.

இந்த சினிமா உலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த கமல்ஹாசன் சென்ற வருடத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புது அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒரு புகார் மையம் என ஏனைய கட்சிகள் கிண்டல் செய்தாலும் கமல்ஹாசன் கஜா புயலின் போது மக்களை அரவணைத்து ஆறுதல் கூறியது அவர் மீதிருந்த கதாநாயகன் பிம்பத்தை உடைத்து மக்களின் நாயகன் ஆக்கியது. இதே போல பல பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்ததையும் ஆளும்கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல வருடங்களாக மக்களைத் திட்டி அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளி கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமாக வாக்குகளைப் பெற்றது அவரது அரசியல் கட்சி மக்களிடன் பிரபலம் ஆகி வருவதைக் காட்டுகிறது.


கமல் அரசியலுக்கு வந்தால் என்னவோ சமீபகாலமாக அவருக்கான விருதுகள் புறக்கணிக்கப்படுகிறது. எத்தனை வருடங்கள் கழிந்தாலும் சிவாஜியின் இடமும், எம்.ஜி,ஆரின் இடமும் சினிமாவில் காலியாக இருப்பதுமாதிரி கமல் இடமும் காலியாகத்தான் இருக்கப் போகிறது. அந்த ஜாம்பாவான்களின் இடத்தை அவர்களால் மட்டுதான்  சினிமாவில்  நிரப்ப முடியும் என்றிருக்க, அரசியலில் காமராஜ், எம்.ஜி.அர் தவிர்த்த சில மாணிக்கங்களில் இடமும், முன்னாள்  முதல்வர்களாக 'கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின்’ இடமும் வெறுமையாய் உள்ளதை அறிந்துதான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார்.

'ஜெயலலிதாவின் இறப்பை அடுத்து சார்ந்தோரின் இரங்கல்கள்' என சாதுர்யமாக டுவிட் பதிவிட்ட கமலுக்கு இனிவரும் காலத்திலும் அரசியல் காய்கள் சாதுரியமாக நகர்த்த முடியுமா என்பதைன் அவரது கட்சியின் செயல்பாடுகள்தன் தீர்மானிக்கும்.

இன்று தனது தந்தை 'டி. ஸ்ரீநிவாசன்'  சிலையைத் திறந்துவைத்து, மையம் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், அரசியலில் எந்த வழியில் செல்லப்போகிறார் என்பது குறித்து 'கொள்கை முடிவுகளை' வெளியிடுவாரா என்று பலரும் எதிர்பார்கின்றனர். அரசியலில் அவரால் புதுமைகளைச் செய்யமுடியாவிட்டாலும் கூட பழைய வெறுப்புஅரசியல்  எனும் தீமைகளை தூக்கி எறிய முடியும் என்று நம்பலாம்.

அதேசமயம் 'அவசரக்குடுக்கைகளாக வள்ளுவர் படத்துக்கு பதிலாக கமல்ஹாசன் படத்தை வெளியிட்டு ஆர்வக கோளாறில் அவரது ரசிகர்கள் தமிழ் மக்களிடம் பிற அரசியல் கட்சிகள் எடுத்த பெயரைச் சம்பாதிக்காமல் இருந்தலும் நலம்' என அரசியல் விமர்சகள் தெரிவிக்கிறார்கள்.

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ..