முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீட்டில் அமலாகத்துறை சோதனை! பெரும் பரபரப்பு..!
முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீடு மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை சேர்ந்த அறப்போர் இயக்கம் இதுகுறித்து ஆதாரங்களை வெளியிட்ட நிலையில், வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், இன்று திடீரென தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும், வைத்திலிங்கத்தின் அறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சோதனைக்கு பின்னரே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் வைத்திலிங்கத்தின் மகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva