வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (12:56 IST)

ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, வாக்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே, ஆர்.கே.நகரில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
 
ஆர்.கே.நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதன் மூலம், வீடு வீடாக இரவில் பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீதிகளில் தற்காலிக பூத் அமைக்கவும்,  அரசியல் கட்சியினர் அமரவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அவற்றில் முக்கியமாக, ஒரு வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்லும் போது எத்தனை பேரை தன்னுடன் அழைத்து செல்கிறார் என முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நபரை அழைத்து சென்றால், அந்த வேட்பாளரின் பிரச்சாரம் ரத்து செய்யப்படும். அதன்பின் அவர் பிரச்சாரம் செய்ய முடியாது.
 
அதேபோல், பூத் அமைத்து பிரச்சாரம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், பூத் சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுக்கக் கூடாது என்பது போன்ற புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.
 
ஏனெனில், பூத் சீட்டுகளை கொடுக்கும் போது அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஆர்.கே.நகர் வேட்பாளர்களுக்கு டிசம்பர் 12 முதல் பூத் சீட்டுகளை வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கவுள்ளது.