வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (13:25 IST)

அதிமுக இரு அணிகள் பேச்சுவார்த்தை பனால்?: மதுசூதனன் பகீர் குற்றச்சாட்டு!

அதிமுக இரு அணிகள் பேச்சுவார்த்தை பனால்?: மதுசூதனன் பகீர் குற்றச்சாட்டு!

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிமுகவின் இரு அணிகளும் கடந்த சில தினங்களாக கூறி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கான எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்தே வருகிறது.


 
 
தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலை சின்னத்தை மீட்க கட்சியை ஒன்று சேர்க்க பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கூறினர்.
 
இது தொடர்பாக இரு அணியினரும் பேச்சுவார்த்தை குழு அமைத்தனர். ஆனால் அதன் பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒருவர் மீது மற்றவர் புகார் கூறுவதையே வாடிக்கையாக வைத்தனர்.
 
ஓபிஎஸ் அணியினர் சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஒதுக்கி வைப்பதாக கூறுவது நாடகம். அவர்களது ராஜினாமா கடிதத்தை கழக அறிக்கையாக வெளியிட வேண்டும். மற்றும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கையை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர்.
 
மாறி மாறி இரு அணியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் கனிந்துள்ளது என ஓபிஎஸ் கூறியதை அடுத்து பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கடைசி வரை பேச்சுவார்த்த நடந்தபாடில்லை.
 
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனன் கூறியுள்ள குற்றச்சாட்டு இந்த பேச்சுவாத்தை நடக்குமா என்ற சந்தேகத்தை வரவைக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் இன்று பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியுடன் நான் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் தவறானது. பழனிசாமியுடன் நான் பேசியதே இல்லை.
 
சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நாடகம் ஆடுகின்றனர். பேச்சுவார்த்தை விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி அணியினர் கபட நாடகம் ஆடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
 
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் கனிந்துள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கபட நாடகமாடுவதாக மதுசூதனன் கூறியுள்ளது பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.